Tuesday 7th of May 2024 10:19:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமைச்சு அலுவலகத்திலிருந்து வெளியேறினார் விமல்; வாசு, கம்மன்பிலவுடன் மகிந்தவை சந்திக்க திட்டம்!

அமைச்சு அலுவலகத்திலிருந்து வெளியேறினார் விமல்; வாசு, கம்மன்பிலவுடன் மகிந்தவை சந்திக்க திட்டம்!


அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச அமைச்சு அலுவலகத்தில் இருந்து தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் வாசுதேவ நாணயக்கர, உதய கம்மன்பில ஆகியோருடன் இணைந்து பிரதமர் மகிந்தவை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சு காரியாலயத்திலிருந்து தமது தனிப்பட்ட உடைமைகளை அப்புறப்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (04) பிற்பகல் கைத்தொழில் அமைச்சுக்கு வருகை தந்தார்.

அதன்போது, தமது உடமைகளை எடுத்துக்கொண்டு அரசாங்க ஆவணங்களை அமைச்சிடம் கையளித்துவிட்டு முன்னாள் அமைச்சர் வெளியேறினார்.

மேலும் தனது அமைச்சில் இதுவரை தன்னுடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

இதனையடுத்து, தனது சொந்த வாகனத்தில் அமைச்சிலிருந்து வெளியேறத் தயாராகும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பதிலளித்தார்.

இன்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தாம் அவ்வாறானதொரு தீர்மானத்தில் இருப்பதாகவும், பிரதமருடன் தமக்கு எந்தவித முரண்பாடும், வெறுப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தம்முடன் இணைந்து பிரதமரைச் சந்திப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இது எந்த வகையிலும் சலுகைகளை கோரும் சந்திப்பாக இருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச, தனது பதவிக்காலத்தில் பொறுப்புணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் கடமையாற்ற கிடைத்ததால் மனமகிழ்வுடன் அமைச்சினை விட்டு வெளியேறலாம் என புன்முறுவலுடன் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE